‘சினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை.’ – நடிகர் சிவகுமார்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கியவர்.  தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘100 காதல்’ ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருக்கிறார். மேலும், ‘நானே என்னுள் இல்லை’ படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

‘புதிய ராகம்’ என்ற படத்திற்கு தானே வசனம் எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார். என்பது குறிப்பிடதக்கது நேற்று நடந்த அவருடைய பிறந்த நாள் விழாவில் ஆர்.வி.உதயகுமார், நடிகர் சிவகுமார், சௌகார் ஜானகி, சினேகன், நமீதா மற்றும் அவரது கணவர், இயக்குநர் சாய்ராம், லக்ஷ்மன் ஸ்ருதி, நேக் ஸ்டுடியோவின் கல்யாண், பாடகர் சிவா போன்ற திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் பேசியதாவது:-

என்னுடன் நடித்த மிக வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். ‘சொல்லத் தான் நினைக்கிறேன்’ மறக்கமுடியாத படம். அதேபோல், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படமும் மறக்க முடியாத படம். பாம்பை ஜெயசித்ராவின் அருகில் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்தக் காட்சிகளை சவாலாக செய்து முடித்தார் ஜெயசித்ரா.

சினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன்.

நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. ஆனால், ஜெயசித்ராவுக்கும், அவரது மகன் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கும், 16 செல்வங்களும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.