நடிகர் சங்க கட்டிடம் விரைவில் உதயமாகும் – டாக்டர் ஐசரி கே கணேஷ்.

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பனாக விளங்கியவரும், அவரது அமைச்சரவையில் அறநிலையத்துறை துணை அமைச்சராகவும் இருந்த ஐசரி வேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற ஒரு விஷயத்தை தான் ஐசரி வேலன் தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருந்தார். என்னுடைய மிக நெருங்கிய நண்பன். மாணவர்களாக இருந்தபோது நட்பாக பழகினோம், பிறகு உறவினராக பழகினோம். கடைசி காலம் வரை நட்பாகவும், உறவாகவும் பழகினோம். புரட்சி தலைவரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த ஐசரி வேலன், ஒரு நாடகம் நடத்துவதற்காக எம்ஜிஆர் கொடுத்த வேனில் நாகர்கோவில் போகும்போது கூட கடைசியாக வண்ணாரப்பேட்டை வந்து என்னை ஒரு முறை பார்த்து விட்டு போனார். அப்படி ஊர் ஊராக போய் நாடகம் நடத்தும்போது விருதுநகரில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது உயிர் பிரிந்தது. பெற்ற பிள்ளைகளை மிக சிறப்பாக வளர்த்திருக்கிறார். தன் பிள்ளைகளுக்கு அவர் கற்றுக் கொடுத்தது கடின உழைப்பு. யார் என்ன உதவி கேட்டாலும் அதை எப்பாடுபட்டாவது செய்பவர். அப்பா என்ன நினைத்தாரோ, ஆசைப்பட்டாரோ அதை மகன் நிறைவேற்றி இருக்கிறார். அவர் ஆசைப்படி மிகப்பெரிய அளவில் கல்விச்சேவை ஆற்றி வருகிறார் ஐசரி கணேஷ். சினிமா மிகவும் நலிந்து இருக்கும் இந்த நிலையிலும் தன் தந்தை விரும்பிய சினிமா துறையிலும் மிக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் ஒரு நல்ல மனது ஐசரி கணேஷ்க்கு இருக்கிறது. ஐசரி வேலன் இறக்கும்போது 2,70,000 கடன் தான் இருந்தது. எம்ஜிஆர் அதை அறிந்து கடனை அடைத்து 30,000 பணத்தை ஐசரி வேலன் குடும்பத்துக்கு கொடுத்தார். அது தான் முதலீடு, அதன் பிறகு எல்லாமே ஐசரி கணேஷின் கடின உழைப்பில் வந்தது. தற்போது எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார் கணேஷ் என்றார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

இந்த நிகழ்வுக்கு வந்தபோது ஐசரி வேலன் அவர்களின் புகைப்படத்துடன் ஜேகே ரித்தீஷ் அவர்களின் புகைப்படமும் இங்கு வைக்கப்பட்டுருந்ததை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நாடக கலைஞர்களின் வாரிசுகள் நாடக கலைஞர்களாக தான் இருப்பார்கள் என்று இல்லை. மிகப்பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். நாடக நடிகர்களின் குடும்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறார் ஐசரி கணேஷ். அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் பூச்சி முருகன்.

என்னுடைய ரோல் மாடல் ஐசரி கணேஷ் அவர்கள் தான். நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடம் இந்த அளவுக்கு வளர ஐசரி கணேஷ் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. சங்கம் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரித்தீஷ் அவர்கள் ஆசைப்பட்டார். அது நிச்சயம் நடக்கும் என்றார் நடிகர் உதயா.

நடிகர் சங்கம் கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஐசரி கணேஷ் தான். நாடக நடிகர்களின் வாரிசுகள் வருங்காலத்தில் சமூகத்தில் மிக முக்கிய அங்கமாக இருப்பார்கள். இன்றைக்கு இந்த நிகழ்வின் மிகச்சிறப்பான மற்றும் நெகிழ்வான விஷயம் தந்தைக்கு இணையாக, தோழனையும் வைத்து நினைவஞ்சலி நடத்தும் ஐசரி கணேஷ் அவர்களின் மிகச்சிறந்த குணம் தான். நடிகர் சங்கத்தில் நாங்கள் இந்த பொறுப்பில் இருக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜேகே ரித்தீஷ் என்பதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் நடிகர் நாசர்.

நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தந்தையின் நினைவஞ்சலி நடத்த வேண்டியது, ஆனால் கட்டிட வேலைகள் முடிவடையாததால் சத்யா ஸ்டுடியோவில் நடத்தியிருக்கிறோம். கடந்த 15 வருடங்களாக இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடந்து வருகிறது, கடந்த ஆண்டு நிகழ்வில் என் நண்பர் ஜேகே ரித்தீஷ் இங்கு வந்து கலந்து கொண்டிருந்தார். அவர் இங்கு இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் உதயமாகும் என்றார் டாக்டர் ஐசரி கே கணேஷ்.

இந்த நிகழ்வில் ஐசரி வேலன் குடும்பத்தினர் மகாலக்‌ஷ்மி, செல்வி, ஆர்த்தி, கமலக்கண்ணன் மற்றும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி பொறுப்பாளர் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.