‘Asuran’ – Movie Review

‘Asuran’ – Movie Review

இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தனுஷ் நடித்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘அசுரன்’, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். ‘V. Creations’ சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

சாகித்திய அகாடெமி விருதைப் பெற்ற பூ. மாணிக்கவாசகம் என்ற பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை, ஒரு சில மாற்றங்களோடு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

‘வெக்கை’ நாவலில் கிராமங்களில் புறையோடியிருக்கும் சாதிய பின்புலங்கள், அதை சார்ந்து நடக்கும் கொலை என படிக்கும்போதே பதை பதைக்கும். அதை எப்படி படமாக்கியிருக்கிறார்கள்?

ரெண்டுங்கெட்டான் வயதான பதினைந்து பதினாறு வயதுடைய சிறுவன் கென், ஆடுகளம் நரேனை கொலை செய்கிறான். அதை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நரேனின் உறவுகள் பலி தீர்த்துக்கொள்ள அவனையும் அவனது குடும்பத்தினரையும் துரத்துகிறது.

காட்டுக்குள் ஓடி மறையும் அவர்களின் கதி என்ன? என்பது தான் படத்தின் படபடக்கும், திக்.. திக்.. திரைக்கதையும் க்ளைமாக்ஸும்!ஒரு படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக இருப்பது நடிகர், நடிகைகளின் தேர்வு. அதை மிகச்சரியாக செய்து வெற்றியை வசமாக்கியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி வட்டாரத்தில் நடக்கும் கதைக்களமாக கொண்டுள்ள இந்தப்படத்திற்கு, மிகப்பெரிய பலமாக சுகாவின் வசனங்களும், கதாபாத்திரங்கள் அதை உச்சரிக்கும் விதமும் வெகு சிறப்பு.

தனுஷ் படத்திற்கு படம் தன்னுடைய அசாத்தியமான திறமைகளை வெளிபடுத்தும் விதம் ஆச்சர்யபடுத்துகிறது. அவருடைய பாடிலாங்குவேஜ் மூலம் சின்னச்சாமி என்ற கதாபாத்திரத்தின் இருவேறு வயதுடைய தோற்றத்தை அழகாக  செய்துள்ளார். இளம் வயதில் வரும் தனுசை விட வயதான தோற்றத்தில் வரும் தனுஷைத் தான் அனைவருக்கும் பிடிக்கும்!

தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர், மூத்த மகனாக நடித்திருக்கும் டிஜே அருணாசலம், இளைய மகனாக நடித்திருக்கும் கென் கருணாஸ், வழக்கறிஞராக வரும் பிரகாஷ்ராஜ், பசுபதி, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன் ஆகிய அனைவரும் மண் சார்ந்த மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

தனுஷுடன் அதிக நேரம் வரும் கென் கருணாஸுக்கும், டிஜே அருணாசலத்திற்கும். மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.

திரைக்கதைக்கு ஏற்றபடி இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

பீட்டர் ஹெய்னின் (காட்டுக்குள் நடக்கும்) சண்டைக் காட்சிகள் திகிலடைய வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர். ஒரு அடர்ந்த காட்டுக்குள் தனுஷூடன் நாமும் பயணிப்பதை போன்ற உணர்வு வருகிறது.

கேமிரா, ஆர்ட் டைரக்ஷன், காஸ்ட்யூம், மியூசிக் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து
ஒரு முழுமையான பீரியட் படம் பார்த்த அனுபவத்தையும் கொடுக்கிறது.

குறைவான காலத்தில் எடுக்கப்பட்ட ‘அசுரன்’ வெற்றிமாறனின் இன்னொரு பெஸ்ட் படம். தொடங்கியதில் இருந்து படம் முடிவு வரை அவரது திரைக்கதை பரபரப்பாக நகர்கிறது.

பஞ்சமி நிலப்பிரச்சனை குறித்து பிரகாஷ்ராஜ் பேசும் வசனங்கள் இருதரப்பினரையும் சமன் செய்தாலும் ஒரு சில இடங்களில் ஒரு சார்பாக இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில், தனுஷின் அசுரத்தனமான நடிப்பில் ‘அசுரன்’ தனுஷூக்கும் வெற்றிமாறனுக்கும் முக்கியமான படம்.

விருப்பு, வெறுப்பில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டால் பல விருதுகளை அள்ளுவான் ‘அசுரன்’

‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து வெட்கி தலைகுனிந்தவர்கள் அசுரனை பார்த்து தலைகுனிவார்களா? என்றால் இல்லை! என்று தான் சொல்லவேண்டும்.