தீதும் நன்றும் – விமர்சனம்

பெரும்பாலும் திரைப்படங்களில் கதைக்கேற்ற தலைப்பு இருப்பதில்லை. ஒருசில படங்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும்.

அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், ‘தீதும் நன்றும்’. இந்தப்படத்தின் தலைப்பும் கதைக்கு பொருத்தமானதாக இருக்கிறது.

ராசு ரஞ்சித், அபர்ணா பாலமுரளி, லிஜோமால் ஜோஸ், ஈசன் , சத்யா ,சந்தீப் ஆகியோர் திரைக்கதையின் முக்கியமான கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஆதரவற்ற ராசு ரஞ்சித், ஈசன் இருவரும் நெருக்கமான பால்ய காலத்து நண்பர்கள். இருவருமே மீன் மார்க்கெட்டில் ‘ஐஸ்’ தயாரிக்கும் கடையில் வேலை செய்கின்றனர்.

இவர்கள் இருவரும் சந்தீப் என்பவருடன் சேர்ந்து இரவு நேர ‘முகமூடி’ கொள்ளையளர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஈசனும், அபர்ணா பாலமுரளியும் காதலித்து கல்யாணம் செய்து கொள்கின்றனர். அதேபோல் ராசு ரஞ்சித்துக்கு லிஜோமாலுடன் காதல்.

முகமூடி கொள்ளைக்கு முழுக்கு போட நினைக்கும்போது சந்தீப்பின் வற்புறுத்தலால் கொள்ளையடிக்கச் செல்லும் இடத்தில் ஒரு பெரிய தாதா கொலை செய்யப்படுகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது. என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் ராசு ரஞ்சித்தே படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். இருந்தாலும், ஒவ்வொரு காட்சிகளிலும் கதாபாத்திரத்திற்குமான முக்கியத்துவத்திற்கு பங்கமில்லை.

அனைத்து கதாபாத்திரங்களும் அதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிலும் மிகைப்படுத்தலில்லை.

சூர்யாவுடன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியின் அறிமுகப்படம்.தான் இந்தப்படம். நிறைவான நடிப்பு.

லிஜோமால் ஜோஸ், ஜாடை பேசும் கண்களின் வசீகரத்தாலும் சிரிப்பாலும் சிறைபடுத்துகிறார், இளைஞர்களை.

வில்லத்தனத்தில் சத்யா மிரட்டியிருக்கிறார்.

சி சத்யாவின் இசை, கெவின் ராஜ் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பலம். அறிமுக இயக்குனரின் படமா? இது என ஆச்சர்ய படுத்துகிறது.

சில குறைகள். இருந்தாலும் பரவாயில்லை.