சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்  – விமர்சனம்

அரசியல்வாதி ஒருவரின் சிபாரிசில் சிலுக்குவார்ப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் சாதாரண  கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் கதையின் நாயகனான விஷ்ணு விஷால். இவருடைய கேரக்டரை அறிமுக இயக்குநரான செல்லா அய்யாவு, சிறிது உதார் போலீஸாகவும், சிறிது கெத்து போலீஸாகவும், சிறிது சிரிப்பு போலீஸாகவும் என கலந்து உருவாக்கியிருக்கிறார்.

இவர் ஆக்சனில் இறங்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு சிறப்பான பின்னணியை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார். அது முழுக்க முழுக்க காமெடியாக இருக்கிறது. அதாவது ஹீரோ விஷ்ணு விஷால் ஓசியில் ஆஃப் பாயிலை விரும்பி ரசித்து சாப்பிடுவார். அதை யாராவது தடுத்து தட்டிவிட்டால்….அவ்வளவுதான்.அவருக்கு கோபம் தலைகேறும். அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் ஆக்சனில் இறங்கி துவம்சம் விடுவார். அவரின் இந்த பழக்கம் அவரை ஒரு சிக்கலில் மாட்டிவிடுகிறது. அதிலிருந்து தப்பித்தாரா?இல்லையா? என்பதை முடிந்த அளவிற்கு காமெடியாக கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

படத்தின் நாயகி ரெஜினா, நாயகன் விஷ்ணு விஷாலுக்கு முறைபொண்ணு. சிறிய வயதிலேயே இருவரும் காதலிக்கிறார்கள். இதனால் ரெஜினாவின் தந்தையார் அவரை வேறு ஊருக்கு சென்று படிக்க வைக்கிறார். அவரும் படித்து முடித்துவிட்டு ஆசிரியையாக சிலுக்குவார்ப்பட்டிக்கு அருகேயுள்ள ஒரு பள்ளிகூடத்தில் ஆசிரியையாக பணியில் சேர்கிறார்.இதனால் மீண்டும் முறைமாமனான விஷ்ணு விஷாலைச் சந்தித்து காதலை தொடர்கிறார். வழக்கம் போல் அப்பா ரூபத்தில் சோதனை வருகிறது.அதனை நாயகன், காலங்காலமாக ஹீரோக்கள் கடைபிடிக்கும் ஸ்டைலில் எதிர்கொள்கிறார்.

திரைக்கதை வழக்கமான ஃபார்முலாவில் தயாராகியிருக்கிறது.சென்னையில் பல கொலைகளை அசால்ட்டாக செய்கிறார் சைக்கிள் சங்கர்.அதுவும் எப்படியென்றால், இவரை என்கவுண்டரில் போட்டுத்தள்ள திட்டமிடும் போலீஸ்அதிகாரியையே பொது இடத்தில் பரபரப்பான போக்குவரத்து சிக்னல் ஒன்றில் வைத்து கொலை செய்கிறார். கொல்லப்பட்டது போலீஸ் என்பதால் போலீஸ் அவனை பன்னிரண்டு தனிப்படைகளைப்போட்டு தேடுகிறது.

இதையறிந்த சைக்கிள் சங்கர் தன் கெட்டப்பை மாற்றிக் கொண்டு, புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார். பிறகு இவர் முன்னாள் அமைச்சர் ஒருவரை கொலை செய்வதற்காக சிலுக்குவார்பட்டிக்கு செல்கிறார். அங்கு கொலை செய்வதற்கு முன் பாரில் தண்ணியடிக்கும் போது எதிர்பாராதவிதமாக ( ஆஃப்பாயில் மேட்டருக்காக ) விஷ்ணு விஷாலுடன் மோதுகிறார். இயல்பாகவே ரௌடி என்றால் சற்று தள்ளிச்சென்று, வெள்ளைக் கொடியுடன் இருக்கும் விஷ்ணு விஷால்,சைக்கிள் சங்கரை ரௌடி என்று தெரியாததால், அவரை கைது செய்து, லாக்கப்பில் தள்ளுகிறார்.

தங்களது பாஸை காணாமல் தேடும் யோகி பாபு கூட்டணி, இறுதியில் சைக்கிள் சங்கர் சிலுக்குவார்பட்டி போலீஸ் ஸ்டேசனின் லாக்கப்பில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரை தப்பிக்க வைக்கிறார்கள்.அப்போது சைக்கிள் சங்கர், தன்னை கைது செய்த விஷ்ணு விஷாலை போட்டு தள்ளாமல் ஊரை விட்டு போகமாட்டேன் என்று சபதம் எடுக்கிறார்.

இதனிடையே விஷ்ணுவிஷால் ரெஜினா காதலுக்கு சிக்கலும், நெருக்கடியும் வருகிறது.இதனை எப்படி விஷ்ணுவிஷால் சமாளித்து ரெஜினாவின் கரத்தைப்பிடித்தார் என்பதை வயிறுவலிக்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

தன்னுடைய ஃபேவரைட்டான ஒன்லைன் பஞ்ச் வசனத்தால் படத்தையும், ஆடியன்சையும் காப்பாற்றுகிறார் ‘நகைச்சுவை சூறாவளி’ யோகி பாபு.ரெஜினா கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.

ஓவியாவை, ஒப்புக்காக ஊறுகாய் அளவிற்கு யூஸ் பண்ணியிருக்கிறார்கள். கருணாகரன் மைண்ட் வாய்ஸில் டயலாக் பேசுவதால் ஆடியன்ஸிடம் ரியாக்ஷனேயில்லை.எரிச்சலும் வருகிறது.

ஆனந்த் ராஜ், பாட்ஷா படத்தின் பார்ட் 2 வை தன்னுடைய பிளாஷ் பேக்காக சொல்வது நல்ல கற்பனை.ஆனால் ஹியூமர் மிஸ்ஸிங். ஒரேயொரு பாடல் மட்டும் கேட்க இனிமையாக இருக்கிறது.